மூட்டுத் தேய்மானத்தைச் சரிசெய்ய அறுவை சிகிச்சை வரை மருத்துவம் வளர்ந்துவிட்டாலும், முழுமையான தீர்வுக்கு சாத்தியம் இல்லாத நிலை. இப்போது புதிதாக வந்திருக்கும் 'கார்டிலேஜ் டிரான்ஸ்ப்ளான்டேஷன்' சிகிச்சை மூலம் மூட்டு தேய்மானத்தை நிச்சயம் சரிசெய்யலாம் என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள். இது குறித்து எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை நிபுணர் இளங்கோவனிடம் பேசினோம்.
''இரண்டு எலும்புப் பகுதிகளை இணைக்கும் பகுதியைத்தான் மூட்டு என்கிறோம். கழுத்து, தோள்பட்டை, கை, கால் என்று அசைவு இருக்கும் பகுதிகளில் எல்லாம் இந்த மூட்டுப் பகுதி காணப்படுகிறது. மூட்டின் உள்பகுதியில் மென்மையான கார்டிலேஜ் என்கிற பரப்பு காணப்படுகிறது. எலும்புகளில் அசைவு ஏற்படும்போது அதில் உராய்வு ஏற்படாமல் தடுக்கும் பொறுப்பு இதனுடையதுதான். இந்த கார்டிலேஜ் பகுதி பாதிப்புக்கு உள்ளாகும்போது எலும்புகள் ஒன்றோடு ஒன்றாக உரசி மூட்டுத் தேய்மானத்தை ஏற்படுத்துகிறது.
இத்தகைய தேய்மானம் பெரும்பாலும் முழங்கால் மூட்டு பகுதியிலேயே அதிகம் ஏற்படுகிறது!'' என்றவர், அதற்கான காரணங்களையும், அதை சரிசெய்யும் கார்டிலேஜ் டிரான்ஸ்ப்ளான்டேஷன் சிகிச்சை பற்றியும் விளக்கினார்...
''பொதுவாக 20 வயதில் இருந்து 45 வயது வரை நாம் அதிகமான வேலைப் பளுவைச் சுமக்கிறோம். வண்டி ஓட ஓட சக்கரம் தேய்வதுபோல், ஒருவருடைய வேலையைப் பொறுத்து, அவருடைய மூட்டில் உள்ள கார்டிலேஜ் என்கிற பகுதியும் தேய்கிறது. அதிக நேரம் நடப்பவர்கள், நின்றுகொண்டே வேலை செய்பவர்கள், அடிக்கடி படிக்கட்டுக்களில் ஏறி இறங்குபவர்கள் மூட்டு தேய்மானத்தினால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். கார்டிலேஜ் பகுதி மட்டும் இன்றி அதற்கு சக்தியை அளிக்கும் சைனோவியல் ஃப்ளூயிட் என்கிற திரவம் குறைவதாலும் மூட்டுத் தேய்மானம் ஏற்படுகிறது. பொதுவாக எலும்பு உடைந்தால், மறுபடி வளரும். ஆனால், இந்த கார்டிலேஜ் பகுதி பாதிப்புக்கு உள்ளானால் மீண்டும் வளர்வது இல்லை. அதனை வளரவைத்தால், இந்த மூட்டு தேய்மானத்துக்கு நிச்சயம் தீர்வு காண முடியும் என்ற சிந்தனையில் தோன்றிய ஆராய்ச்சிதான் கார்டிலேஜ் டிரான்ஸ்ப்ளான்டேசன்!
சைனோவியல் ஃப்ளூயிட் அளவு குறைவது மூட்டு தேய்மானத்தின் ஆரம்ப கட்ட நிலை. இதைப் போக்க செயற்கையாக உருவாக்கப்பட்ட சைனோவியல் ஃப்ளூயிட்டை ஊசி மூலமாக மூட்டுக்குள் செலுத்துவார்கள். கார்டிலேஜ் பகுதியில் பாதிப்பு எனில், அதற்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சைதான் சிறந்தது. இதில் செயற்கையாக மூட்டு செய்து பொருத்தப்படும். பெரும்பாலான எலும்பு முறிவு நிபுணர்கள் இந்த முறையைத்தான் கையாளுகின்றனர். அதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது கார்டிலேஜ் டிரான்ஸ்ப்ளான்டேஷன் சிகிச்சை. வெளிநாடுகளில் இந்த சிகிச்சை பரவலாகப் பின்பற்றப்படுகிறது. இந்தியாவில் பெரும்பான்மையான நகரங்களில் இம்முறை தற்போது கையாளப்பட்டு வருகிறது.
இதில், இறந்தவர்களின் உடம்பில் இருந்து கார்டிலேஜ் பகுதியை எடுத்து தேய்மானத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பொருத்தப்படும். 20 வயதில் இருந்து 25 வயதுக்குள் இறந்துபோனவர்களுடைய கார்டிலேஜ் பகுதிதான் இதற்குப் பொருத்தமானது. இந்த வயது உடையவர்களின் கார்டிலேஜ் பகுதி அதிகத் தேய்மானத்துக்கு உள்ளாகாமல் இருக்கும். மூன்றில் இருந்து ஆறு மாதங்களுக்குள் இந்த கார்டிலேஜ் பகுதி ஒட்டி வளர ஆரம்பித்துவிடும். இதில் உள்ள ஒரே சிக்கல் பொருத்தப்படும் கார்டிலேஜை, அந்த நபரின் உடல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான். தற்போது இந்த முறையில் 50 பேர்களுக்கு கார்டிலேஜைப் பொருத்தினால் 30 பேருக்குத்தான் பொருந்துகிறது.
இதைத் தவிர கார்டிலேஜ் பகுதி தேய்மானத்துக்கு உள்ளானவர்களிடம் இருந்தே கார்டிலேஜை எடுத்து வெளியில் வளரவைக்கலாம். இதனால் கார்டிலேஜ் கொடுப்பவர்களுக்காக நாம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இதற்கான தொழில்நுட்பம் தற்போது நம் நாட்டில் இல்லை. இதனால், இறந்த பிறகு கண் தானம் செய்வதுபோல் இந்த கார்டிலேஜ் பகுதியையும் தானம் செய்ய மக்கள் முன்வந்தால், இந்த சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம்.
இதனால், எதிர்காலத்தில் செயற்கையாக மூட்டு பொருத்துவதற்குப் பதிலாக இயற்கையாகவே இந்த பிரச்னைக்குத் தீர்வு காண முடியும். இதனால் பெரிய அளவில் செலவையும் குறைக்க முடியும்!'' என நம்பிக்கை வார்க்கிறார் டாக்டர் இளங்கோவன்.
கார்டிலேஜ் தானம் செய்யக் கிளம்புவோமா?
No comments:
Post a Comment